காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர், மாமியார் கைது…

விழுப்புரம் அருகே உள்ள தாதம்பாளையத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா(19). இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள், பிரேமாவை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற கலியபெருமாளை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

கலியபெருமாள், புதுச்சேரி மாநிலம் அரியூருக்கு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரேமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை பிரேமாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் கலியபெருமாள் அவரது வீட்டிற்கு பிரேமாவை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.

இதனிடையே பிரேமா கர்ப்பமானதும் அவரது பெற்றோர், தாதம்பாளையத்திற்கு வந்து வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். அதன் பிறகு நடந்து முடிந்த திருமணத்திற்கு செய்ய வேண்டிய சீர்வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

அப்போது இந்த சீர்வரிசை பொருட்கள் போதாது என்றும், மேலும் சீர்வரிசை பொருட்களும், வரதட்சணையும் வாங்கி வரும்படி கேட்டு பிரேமாவை கலியபெருமாளும், அவரது தாய் சூரியகாந்தியும்(59) கொடுமை செய்து வந்துள்ளனர். பிரேமாவுக்கு குழந்தை பிறந்த பின்னரும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கலியபெருமாள், புதுச்சேரி அரியூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு பிரேமாவை அழைத்துச்சென்று உங்கள் மகள் இங்கேயே இருக்கட்டும் என்று கூறி பிரேமாவை விட்டுவிட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு தாதம்பாளையத்திற்கு வந்து விட்டார்.

அதன் பிறகு பிரேமாவின் உறவினர்கள், போலீசில் புகார் செய்யவே கடந்த 19-ந் தேதி கலியபெருமாள், அரியூருக்கு சென்று தனது மாமனார் வீட்டாரிடம் பிரேமாவை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன் என்று கூறி அங்கிருந்து தாதம்பாளையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த கலியபெருமாள், உருட்டுக்கட்டையால் பிரேமாவை அடித்துக்கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு கலியபெருமாளின் தாய் சூரியகாந்தி உடந்தையாக இருந்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கலியபெருமாள், சூரியகாந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x