திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டியது. அதை நிரூபிக்கும் விதமாக, சட்டசபைக்குள் குட்காவை, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர். இதையடுத்து, 21 தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ வழக்கை விசாரித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது.
இன்று காலை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2017 ல் உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசில் உள்ள தவறுகளைச் சரி செய்து புதிதாக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி விளக்ககம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.