“திரையரங்குகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை..!” ஒரே போடு போட்ட அமைச்சர்!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கொரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் அரசின் அறிவிப்பைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகவும், திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்தது.
திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கேமரா முன் நிற்கும் நடிகர்கள் தவிர மற்றவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நடைமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி இன்றுடன் 150 நாள்களுக்கு மேல் ஆகின்றன. இதனால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் எனத் திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், “மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே திரையரங்குகளைத் திறக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.