யெஸ் வங்கி நிறுவனருக்கு ஜாமின் மறுப்பு!

வாடிக்கையாளர்கள் பணத்தை முறைகேடாக நிறுவனங்களுக்கு கடனளித்து மோசடியில் ஈடுபட்டதால் திவால் நிலைக்கு வந்தது யெஸ் வங்கி. இவ்வழக்கில் ஜாமின் கேட்ட நிறுவனர் ராணா கபூரின் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த யெஸ் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதால் திவால் நிலைக்கு வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் செயல்பாட்டை முடக்கியது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. கடனை திருப்பி செலுத்த தகுதியில்லாத பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் ராணா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூ.4,300 கோடி அளவுக்கு பயன் அடைந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தநிலையில், சிறையில் உள்ள ராணா கபூர் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்வைத்யா , ஜாமின் வழங்க மறுத்தார்.