நான்காம் முறையாக நீட்டிக்கப்பட்ட ஏர் இந்தியா பங்குகள் விற்பனைக்கான விண்ணப்பக்காலம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகள் விற்பனையின் விண்ணப்பக்காலம் நான்காம் முறையாக அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படும் வருமான இழப்புகள் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதால், ஏர் இந்தியா பங்கு விற்பனையில் விண்ணப்பிக்கும் காலம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து அரசாங்கம் வழங்கிய நான்காவது கால நீட்டிப்பு ஆகும். தொடக்கத்தில் பங்கு விற்பனைக்கான விண்ணப்பிக்கும் காலம் மார்ச் 17 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 30 வரையும், ஆகஸ்ட் 31 வரையும் நீட்டிக்கப்பட்டது.
கொரோனா சூழலைக் காரணம் காட்டி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையின்படி காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக முதலீடு மட்டும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைக்கான துறை தெரிவித்துள்ளது.