நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை பாதியாக குறையும்: ஆய்வறிக்கையில் தகவல்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை பாதியாக குறையும். 400 டன்களை தாண்டாது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வால், இந்தியாவிலும் நகைக்கடைகளில் தங்கம் விலை உச்சத்துக்கு சென்றது.
அதன்பிறகு, ரஷ்யா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு, அமெரிக்கா – சீனா இடையே ஏற்றுமதி இறக்குமதியில் உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதால், உள்நாட்டிலும் தங்கம் விலை குறைகிறது. மேலும் ஒரு சில நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும், பொருளாதார நடவடிக்கைகள் படிப்படையாக சீரடைய தொடங்கினாலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் பலர் வேலை இழந்தனர். வருமானம் குறைந்து விட்டது. இதனால், சேமிப்புகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த துவங்கி விட்டனர். அதோடு, மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் தங்கத்தின் மீதான முக்கியத்துவம் மக்களிடையே குறைய துவங்கி விட்டது.
இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை பாதியாக குறைந்து விடும். அதாவது, கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தங்கத்தின் தேவை சராசரியாக 700 டன்களாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 300 முதல் 400 டன்களாக குறைந்து விடும். கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என யுபிஎஸ் என்ற அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் தங்கத்தின் தேவை சராசரியாக 700 டன். இது நடப்பு ஆண்டில் 400 டன்களுக்குள்தான் இருக்கும்.
- வேலை இழப்பு, வருவாய் குறைவால் சேமிப்பு குறைந்து விட்டது. பிற முதலீடுகளில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.