13 வயது தமிழக மாணவர் உருவாக்கிய செயலியை 28 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள கூகுள்!!

தகவல் பரிமாற்றத்திற்காக இன்று உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி இருந்துவரும் நிலையில் வாட்ஸ் அப்பை விட அதிக வசதி கொண்ட புதிய தகவல் பரிமாற்ற செயலி ஒன்றை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்று வரும் பிரனேஷ் என்ற இந்த மாணவர் கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடத்திய கோடிங் ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்றுள்ளார். அதன் மூலம் இந்த மாணவர் இந்த புதிய செயலியை உருவாக்கி உள்ளார். இவர் ‘ஜெட் லைவ் சாட்'(JET LIVE CHAT) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். செயலியை பரிசீலித்த கூகுள், பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து தற்போது இந்த சிறுவன் உருவாக்கிய செயலியை அடுத்த 28 ஆண்டுகளுக்கு கூகுள் ஒப்பந்தம் செய்து பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்துள்ளது.
இதுகுறித்து மாணவன் பிரனேஷ் கூறுகையில், “இந்த செயலியை இரு வார முயற்சியில் உருவாக்கினேன். இந்த செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் அனுப்பலாம். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே அனுப்ப முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த செயலி மூலம் நாம் அனுப்பும் தகவல் அறிமுகம் இல்லாத நபர்கள் யாரும் பார்க்க முடியாது, அறிமுகம் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யவும் முடியாது. மேலும் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 15 பேருக்கு ஷேர் செய்யலாம். முகநுாலில் ‘லைக்’ பதிவிடுவது போல இந்த செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது என்றும், எனது செயலிக்கு 2048 ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது. 2018-ம் ஆண்டு பிந்தைய மாடல் வெர்ஷன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும்” என்றும் இந்த செயலி குறித்து மாணவன் பிரனேஷ் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர் செய்த இந்த புதிய சாதனைக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த செயலி தற்போது அதிக நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.