தரமற்ற கேன் தண்ணீரில் தாகம் தணித்து, நோயை வாங்கிக் கொள்ளும் சென்னை மக்கள்!

சென்னை கடைகளில் விற்கப்படும் கேன் தண்ணீரில் 40 சதவீதம் தரமற்றவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் விற்கக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்காக அனுப்பி இருந்தது. சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்ற தண்ணீர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள 147 குடிநீர் மாதிரிகளில் 30இல் பாக்டீரியா, வைரஸ் போன்ற பரவல் இருப்பதும், 20 மாதிரிகள் போலியான நிறுவனங்களின் பெயர் மற்றும் சீல் உடன் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற தரமற்ற நீரை குடிப்பதால் காலரா, டைஃபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி அதனுடன் நோய்களையும் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம் இத்தனை நோய் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரியவந்துள்ளது. எனவே சென்னையில் விற்கக்கூடிய கேன் தண்ணீரில் 40% குடிப்பதற்கு தரமற்றவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.