கொரோனா பரிசோதனை செய்த சிலமணி நேரங்களில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை!

கொரோனா பரிசோதனைக்காக மூக்கிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் திரிபுராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறியும் வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டன. குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுத்தபோது, மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது பிரச்னை எதுவும் இல்லை என்றும், குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், தனது குழந்தை இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில் கொரோனா இல்லை என சோதனையில் உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அப்பெண், காவல்துறையினரிடம் புகார் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.