அம்பேத்கர் வாழ்ந்த வீடு மீது தாக்குதல்; குற்றவாளி கைது

மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த ‘ராஜ்க்ருஹா’ இல்லம் அமைந்துள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தினார். இதனை தொடர்ந்து அம்பேத்கர் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது

அண்ணல் அம்பேத்கரின் இல்லம் சேதப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்றும், மனநல பாதிப்புக்கு உள்ளானவரே, கோபத்தில் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.