கருப்பின மக்களின் சூப்பர் ஸ்டார் சட்விக் போஸ்மேன் மறைந்தார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிளாக் பாந்தர் படம் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் சட்விக் போஸ்மேன் (43). இவர் பெருங்குடல் புற்றுநோயால் கடந்த 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் குடும்பம் சூழ இருக்கும் போது உயிரிழந்துள்ளார்.
பிளாக் பாந்தர் படத்தில் நடித்திருந்த சட்விக் உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். 2016-ம் ஆண்டு இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் ‘உண்மையான போராளி’ என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிளாக் பாந்தர் படத்தில் அரசனாக நடித்திருந்த சட்விக் ‘உண்மையிலேயே ஒரு அரசன் தான்’ எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2003-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆன இவர், 2013-ம் ஆண்டு தனது முதல் ஹாலிவுட் படத்தில் நடித்தார். கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்திலும் நடித்திருந்தார் சட்விக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவர் நடித்திருந்த ஸ்பைக் லீ’ஸ் டா 5 பிளட்ஸ் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் கடைசியாக ஆகஸ்ட் 12-ம் தேதி அமெரிக்க தேர்தலில் துணை அதிபராக போட்டியிட உள்ள கமலா ஹாரிஸை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் ட்விட்டரில் அஞ்சலில் தெரிவித்து வருகின்றனர். கருப்பின மக்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சட்விக் போஸ்மேனுக்கு ரசிகர்களும் தங்கள் வேதனையை ட்விட்டரில் பல ஹேஷ்டேக்குகளை போட்டு தெரிவித்து வருகின்றனர்.