ஐபிஎல்2020 தொடரில் இருந்து விலகினார் ‘சின்ன தல’ ரெய்னா!!

ஐபிஎல்2020 கிரிக்கெட் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பயிற்சிக்கு தயாராக இருந்த வேளையில் சென்னை அணியின் நிர்வாகிகள், பந்துவீச்சாளர் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா விலகுவதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சொந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுகிறார் என்று அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சின்ன தல’ ரெய்னா விலகுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.