இந்திய பொருளாதாரம் எதனால் அழிந்தது தெரியுமா? நிதி அமைச்சருக்கு பாடம் புகட்டும் ராகுல் காந்தி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்தவட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாட்டின் பொருளதார வளர்ச்சி மோசமாகி வருவது குறித்து மத்திய அரசு பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டுவருவது குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “நாட்டின் பொருளாதாரம் 3 செயல்களால் அழிக்கப்பட்டது. முதலாவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது. இரண்டாவதாக தவறான ஜி.எஸ்.டி வரிக் கொள்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மூன்றாவதாக கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாகக் பயன்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்தது” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறும் போது “தொற்றுநோய் கடவுளின் செயல்’ என்றால், தொற்று நோயைத் தாக்கும் முன் இந்தியா 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலங்களில் இருந்த பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது? “கடவுளின் தூதராக உள்ள நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.