“வங்கி கடன் தவணையை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத்தொகையை செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்டு 31-ந் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப்போயிருக்கும் நிறுவனங்களுக்கும், குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் வாடிக்கையாளர்களுக்கு மறந்து போகும், வங்கிகளின் நிதி நிலைமையையும் பாதிக்கும் என்றெல்லாம் இட்டுக்கட்டிய காரணங்களைத் தேடித் தேடிச் சொல்வது, பேரிடர் கால நிர்வாகத்தில் ஏற்றுக்கொள்ள இயலாதவை. இதே தனி நபர்கள், நிறுவனங்கள் பேரிடருக்கு முன்னர் முறையாக தவணைத் தொகைகளைத் திருப்பிச் செலுத்தி வந்ததை ஏனோ ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் மறந்துவிட்டு, “கால அவகாசம் நீட்டிக்கக்கூடாது” என்ற பிரசாரத்தைத் தொடங்கியிருப்பது வாடிக்கையாளர் விரோத மனப்பான்மையின் உச்சக்கட்டமாக தெரிகிறது.

‘வாடிக்கையாளருக்கு முதல் சேவை’ என்ற இலக்கணத்திற்கும் விரோதமானது; வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடப்போரின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயல்.

வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத்தொகை செலுத்தியபோது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்கவேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல.

கொரோனா பேரிடரின் கொடிய பிடியில் சிக்கியுள்ள மக்களையும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் மீட்டு, பொருளாதார ரீதியாக, தொழில் ரீதியாக முன்னேற்றி, வளர்ச்சி நீரோட்டத்தில் தக்கவிதத்தில் இணைத்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும் ‘கடவுளின் செயல்’ என்ற கோட்பாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகைக்கு நிச்சயம் பொருந்தாது; ஆனால் கடன் வாங்கி, வருமான இழப்பிற்கு உள்ளான மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தக்கூடும் என்பதை ரிசர்வ் வங்கி இந்த நேரத்தில் உணர வேண்டும்.

ஆகவே, கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக்கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்டு 31-ந் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும்; அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித்தொகை அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை – எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசையும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் அப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிடவே கொரோனா காலத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நேசக்கரம் நீட்டிட வேண்டும் என்றும்; சமீபத்தில் தனது 584-வது நிர்வாகக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையில் இருந்து 2019-2020-ம் ஆண்டிற்கான ரூ.57,128 கோடியை கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கிக்கு, இதுபோன்ற ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்காக உதவி செய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதையும் ரிசர்வ் வங்கி கவர்னர் மனதில் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x