மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவரின் இல்லத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் மலர்கள் தூவி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார்.
பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று அதிகாலை டெல்லி ராஜாஜி மார்க் சாலையில் இருக்கும் அவரின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய உயர் அதிகாரிகள், விஐபிக்கள் மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்கு இன்று காலை பிரமதர் மோடி வந்து அவரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பிரணாப் முகர்ஜியின் மகன், மகள் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.
மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆகியோர் பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்கு வந்து மலர்கள் தூவி பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.