பிரதமர் பெயரை பேஸ்புக் ஊழியர்கள் கெடுக்கின்றனர் – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

புது டில்லி: பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மத்திய ஐ.டி., அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில், ‘குறிப்பிட்ட சிந்தாந்தங்களுக்கு பாரபட்சமாகவும், பிரதமர் மோடியை களங்கப்படுத்தும் வகையிலும் தங்கள் ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள்’ என குற்றம்சாட்டியுள்ளார்.
பேஸ்புக் சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு ஐ.டி., அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய மூன்று பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு சில குறிப்பிட்ட பக்கங்களை நீக்கக்கூடாது என பேஸ்புக் இந்தியா நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுப்பட்டதாக எனக்குத் தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர்கள் வலதுசாரி சித்தாந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவியும் அல்லது முறையீட்டு உரிமையும் வழங்கவில்லை.
பேஸ்புக் இந்தியா நிர்வாகத்தில் அரசியல் சார்புடன் இயங்குபவர்களின் ஆதிக்கம் இதன் மூலம் தெரிகிறது. எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு விருப்பு, வெறுப்புகள் இருக்கும். ஆனால் அவை பொது கொள்கைகளிலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடாது. பேஸ்புக் ஊழியர்கள் பிரதமரையும், மூத்த அமைச்சர்களையும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே களங்கப்படுத்துவது சிக்கலானது. இது லட்சக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.