“மத்திய புலனாய்வு அமைப்புகள் வரம்பு மீறல்..”- பினராயி விஜயன்

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம், கருப்பு பண மோசடி, போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை, சுங்க இலாகா உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கேரள முதல் மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு பொறுப்பேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வேண்டும் என்று மாநில அரசுதான் கேட்டுக்கொண்டது. அதன்படி மத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கின. மாநில அரசும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது. முதலில் இந்த விசாரணை சரியாகத்தான் சென்றது.

அதன்பின்புதான் விசாரணையில் மாற்றம் ஏற்பட்டது. இடையில் ஏற்பட்ட குறுக்கீடு காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன்.

எந்த ஒரு புலனாய்வு அமைப்பையோ அல்லது அதன் அதிகாரியையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வில்லை. அவை வரம்பு மீறி செயல்படுகிறது. இதனால் இனிவரும் நாட்களில் விசாரணை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் மாநில மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x