திமுக.,வின் முக்கிய தலைவர்களுக்கு உறுதியான பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்!!

திமுக.,வின் பொதுச்செயலர், பொருளாளர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. மேலும், பொருளாளராக இருந்த துரைமுருகனும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக.,வில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 4ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5ம் தேதி மாலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி பெயர்கள் அடிப்பட்ட நிலையில், பொருளாளர் பொறுப்புக்கு தான் விண்ணப்பம் வாங்கப்போவதுமில்லை, போட்டியிடப்போவதுமில்லை என ஆ.ராசாவும், திமுக பொருளாளர் பொறுப்புக்கு தான் போட்டியிடவில்லை என கனிமொழியும் கூறினர்.
இதனால், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று டில்லி சென்ற அவர் அவசரமாக இன்று மதியம் சென்னை திரும்புகிறார். இதன் மூலம் திமுகவின் பொருளாளர் பாலு என்பது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.