“எனக்கும், தோனிக்கும் இடையே எந்த மோதலும் இல்லை; சென்னை அணிக்கு விரைவில் திரும்புவேன்” – ரெய்னா!

தோனியுடன் ஏற்பட்ட மோதலால் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகியதாக தகவல் வந்த நிலையில், தனக்கும், தோனிக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்த சுரேஷ் ரய்னா, சென்னை அணி சாரிபில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமிகரத்துக்கு சென்றார். ஆனால் திடீரென அவர் நாடு திரும்பினார். ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் குழப்பம் நிலவியது. தனது உறவினர் ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்பியதாக ரெய்னா விளக்கமளித்தார்.
ஆனால் தோனி உடனான மோதல் தான், ரெய்னா, ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறக் காரணம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் ரெய்னாவுக்கு அளிக்க ஹோட்டல் அறை தொடர்பாக, மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட அறையில், பால்கனி உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை என்றும், தோனிக்கு வழங்கப்பட்டதைப் போன்று தமக்கு அறை வழங்க வேண்டும் என ரெய்னா கேட்டதாகவும் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து சி.எஸ்.கே. அணியின் உரிமையாளரான சீனிவாசன் கூறுகையில், “சிலருக்கு வெற்றி போதை தலைக்கேறி விட்டால் இப்படி நடக்கும். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் 11 கோடி வருமானத்தை இழந்ததற்காக ரெய்னா வருந்துவார். விளையாடியே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இல்லையென்றால் வெளியேறி போய் விடலாம். தோனி அவ்வபோது வீரர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிகிறார். எந்த சூழலையும் சமாளிக்க தயாராய் உள்ளார்” என கூறியுள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் அணியுடனான கருத்து மோதல் காரணமாகவே அவர் வெளியேறியுள்ளது உறுதியானது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரெய்னா, “இது ஒரு தனிப்பட்ட, கடினமான முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. சி.எஸ்.கே எனது குடும்பம் மற்றும் மஹி பாய் (எம்.எஸ்.தோனி) எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். சி.எஸ்.கே அணிக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. சரியான காரணமின்றி யாரும் 12.5 கோடி ரூபாயைத் வேண்டாமென்று யாரும் செல்ல மாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் இன்னும் இளமையாக இருக்கிறேன், அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை எதிர்பார்க்கிறேன்.
சீனிவாசன் எனக்கு ஒரு தந்தை உருவம் போன்றவர், அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் என்னை தனது இளைய மகனைப் போலவே நடத்துகிறார். ஒரு தந்தை தன் மகனைத் திட்டலாம். அவர் அந்தக் கருத்துக்களைக் கூறும்போது நான் வெளியேறுவதற்கான உண்மையான காரணங்கள் அவருக்குத் தெரியாது. நான் இந்தியாவில் இருந்தாலும் பயிற்சி மேற்கொண்டு தான் வருகிறேன். விரைவில் சென்னை அணியில் என்னை காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.