மதுரையின் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த ஆர்.பி உதயகுமாரின் சுவரொட்டியை கிழித்துவிட்டு திருக்குறள் எழுத முயன்ற ஓவியர் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியின் சுவற்றில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை பாராட்டி கட்சியினர் சுவரொட்டியை ஒட்டி இருந்தனர். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், சுவரொட்டியை அகற்றி அதில், திருக்குறளை எழுதும் பணியினை ஓவியர் கஜேந்திரன் என்பவருக்கு வழங்கினார்.
அதன்படி, சுவரொட்டியை அகற்றும்போது, அமைச்சர் உதயகுமார் தன்னை நேரில் அழைத்து மிரட்டியதாகவும், அவரது ஆதரவாளர்கள் 15 பேர் தாக்கியதாகவும் தெப்பக்குளம் போலீசில் ஓவியர் கஜேந்திரன் புகார் அளித்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் ‘அம்மா கிச்சன்’ என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு அமைச்சர் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த கட்டிடத்திற்கு எதிரேதான், மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றிவிட்டு திருக்குறள் எழுத முயன்ற ஓவியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
