திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வான துரைமுருகன் மற்றும் டி.ஆர். பாலு!!

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. திமுக எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோரும் இந்த பதவிகளுக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார். இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இன்று பிற்பகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.