டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு: ஐ.பி.எல்லுக்கு தடை விலகியது

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நவம்பரில் ஐபிஎல் போட்டி நடத்த இருந்த தடை விலகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் விளையாட்டு உலகத்தை மோசமாக பாதித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் முக்கியமான விளையாட்டு போட்டிகள் பலவும் ரத்தாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அப்போட்டி 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இம்முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் 2021-ல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், மேலும் 2022-ம் ஆண்டிலும் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ல் நடக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் நடைபெறும் என தெரிகிறது.