“அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை” அமைச்சர் கே.பி. அன்பழகன்!

பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்பால் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் 1 முதல் 30 பாடங்கள் வரை அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் போஸ்டர்களை ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பி.இ., படிப்பில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க ஏஐசிடிஇ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில் ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது. 1 முதல் 3 ஆண்டு அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் தேர்ச்சி வழங்கமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது எனவும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்களை ஒரே அறிவிப்பில் தேர்ச்சி அடைய செய்ய முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே,பி அன்பழகன், “பொறியியல் மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த அரியர் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.