இலங்கை கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த கச்சா எண்ணெய் கப்பலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

இலங்கையின் தென் கிழக்கே வந்து கொண்டிருந்த எம்.டி.நியூ டைமண்ட் என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்து கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் எண்ணெய்க் கசிவு ஏதும் இல்லை எனவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.டி. நியூ டைமண்ட் என்ற டேங்கர் வகை கப்பல் குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து சுமார் 2 .70 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு கடந்த வாரம் புறப்பட்டது.

இக்கப்பல் இலங்கையின் சங்கம கண்டா முனையிலிருந்து தென் கிழக்கே சுமார் 22 கடல் மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில் கப்பலில் திடீரென தீப்பற்றியது. கப்பலின் இயந்திரங்களில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக முதலில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தீ மளமளவென எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த இலங்கை கடலோரக் காவல் படையினர் ராவணா, விஸாபா என்ற இரண்டு கப்பல்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கப்பலில் இருந்த 23 மாலுமிகளில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அவ்வழியே வந்த பயணியர் கப்பல் ஒன்றின் உதவியுடன் பத்திரமாக அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கப்பலில் 2.70 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் அபாயமும், அவ்வாறு மூழ்கும் நிலையில் கச்சா எண்ணெய் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடு பெரிய அளவில் இருக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சௌரியா என்ற கப்பலும், காரைக்கால் துறைமுகத்திலிருந்து அமேயா, அபீக் ஆகிய இரண்டு அதிவேக ரோந்துக் கப்பல்களும் புறப்பட்டுச் சென்றது. இது தவிர இரண்டு டோர்னியர் விமானங்கள், சேடக் ரக ஹெலிகாப்டர்கள் சென்னையிலிருந்து இலங்கையின் கடற்படை தளமான அம்பன்தோட்டா சென்றடைந்து அங்கிருந்து தீயை அணைக்கும் பணியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன.

இது தவிர சாரங், சுஜய் ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்களும், பல்வேறு நவீன உபகரணங்கள் அடங்கிய சமுத்ரா பகீரதர் என்ற சிறப்புக் கப்பலில் சுமார் 1000 லிட்டர் எண்ணெய் கசிவுகளை சிதறடிக்கும் ரசாயனம் மற்றும் தீயைக் கட்டுப்படுத்தும் ரசாயன பொடியையும் எடுத்துச் செல்லப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் முழுவீச்சில் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதாக  பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒருவேளை கப்பல் பிளவுபட்டு உடையும் நிலை ஏற்பட்டால் இலங்கை கடல் பகுதி மட்டுல்லாது இந்திய கடல்பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் பெரும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் அபாயம் ஏற்படும். எனவே இத்தகைய ஆபத்துகளை எதிர் கொள்ளும் வகையில் இந்திய, இலங்கை கடலோரக் காவல் படையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கப்பலில் தீ முற்றிலுமாக அணைக்கப்படும் நிலையில் அதில் இருக்கும் கச்சா எண்ணெய்யில் கசிவு ஏதும் ஏற்பட்டுவிடாமல் கப்பலை ஏதாவது துறைமுகத்திற்கு கொண்டு வர இரண்டு இழுவைக் கப்பல்கள் தயார் நிலையில் தீப்பற்றி எரியும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தீ பரவி விடாமல் தடுப்பதே மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் தீயில் பெரும்பகுதி அணைக்கப்பட்டு தீ விபத்துக்கு உள்ளான எம்டி நியூ டைமண்ட் கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை இன்று காலை தெரிவித்துள்ளது.

ஏ.எல்.பி. விங்கர் என்ற சிறப்பு இழுவை கப்பல் உதவியுடன் இலங்கை கடற்கரையில் இருந்து சுமார் 33 கடல் மைல் தூரத்தில் தற்போது கப்பல் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எவ்வித எண்ணெய் கசியும் இல்லை. இதனால் இப்பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் இல்லை. தொடர்ந்து கப்பலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x