“ஐபிஎல்2020 போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்” ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்!

ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஏகப்பட்ட மாற்றங்கள், குளறுபடிகள், பிரச்சனைகள். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்றால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகள் முறையாக பயிற்சிக்கு பின் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளனர். போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பரிசோதனைகளுக்காகவே பிசிசிஐ பத்து கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்படும்.ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அட்டவணை காலதாமதமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி அட்டவணை தொடர்பாக பல நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.