வரும் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்! ரயில்வே வாரியம் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மெல்ல தொடங்கியுள்ளது. சென்னை சென்டிரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தமிழகத்தில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை ஏற்று, செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. மேலும், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – மதுரை, சென்னை – கோவை, சென்னை – குமரி, சென்னை – தூத்துக்குடி, சென்னை – மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் 7-ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.