திருடிய வீட்டில் பையன் பெயர் எழுதிச் சென்று சிக்கிய அப்பா(வி) திருடன்!

சென்னை சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செளந்தர்ராஜன். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 27ம் தேதி தனது சொந்த ஊரான ஆரணிக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.
இவரது வீட்டின் பூட்டு செப்., ஒன்றாம் தேதி உடைக்கப்படு கிடப்பதை பார்த்து பக்கத்து வீட்டினர் தகவல் தந்துள்ளனர். வந்து பார்த்த போது வீட்டிலிருந்த 24 இன்ச் எல்ஈடி டிவி, 2 கிராம் தங்கம், சிலிண்டர், மடிக்கணினி, ஹோண்டா ஆக்டிவா பைக் ஆகியவை திருடுபோயிருந்தது.
இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் சிசிடிவி காமிரா இல்லாததால் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை போலீசார் சேகரித்தனர். ஒற்றை கால் செருப்பை விட்டுச் சென்றிருந்த திருடின், வீட்டினுள் சுவற்றில் விஷ்ணு என்ற பெயரை கிறுக்கி இருந்தான்.
தனிப்படை அமைத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விஷ்ணு என்று எழுதப்பட்டிருந்த ஹோண்டா ஆக்டிவா வாகனம் வந்தது. அதன் நம்பர் பிளேட் போலி என்பதை கண்டுபிடித்தனர். ஆக்டிவாவிலும் விஷ்ணு என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அதில் வந்த மதனை பிடித்துச் சென்று விசாரித்த போது, ஆசிரியர் வீட்டில் தனது நண்பர் ராகுலுடன் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
திருடு போன வீட்டின் அருகே மதுக்கடை இருந்ததாகவும், மது வாங்க கையில் போதிய பணம் இல்லாததால், பூட்டிய வீட்டிற்கு நுழைந்து திருடினேன். பின் என் மகன் நினைவாக வீட்டுச் சுவரில் அவன் பெயரை கிறுக்கிவிட்டு வந்தேன் என கூறியுள்ளார். மதனையும் அவனது கூட்டளி ராகுலையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.