கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்த ஓட்டுநர்!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது பெண்மணி. இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் நவ்பல், (29) என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் இருவரையும் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றார்.
தாய் ஆறன்முளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகளை அடூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினர். அவரை அழைத்துச் செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் நவ்பல், அந்த பெண்ணை இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்தனர். அவரை பணியிலிருந்து நீக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, கேரள மகளிர் நல ஆணையம் நேரடியாக வழக்கு பதிவு செய்தது.