கோவையில் வீடு இடிந்து விழுந்து இருவர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்!

கோவை நகரில் நேற்று பெய்த மழையில் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கோவை, செட்டி வீதியில் கண்ணன் என்பவருக்கு இரண்டு மாடி வீடு உள்ளது. முதல் தளத்தில், மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோருடன் கண்ணன் வசித்து வந்தனர். தரை தளத்தில், மற்றொரு குடும்பம் வாடகைக்கு இருந்தனர்.
ஞாயிறு இரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து, அருகிலுள்ள ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடுபாடுகள் விழுந்ததில் ஸ்வேதா மற்றும் ஓட்டு வீட்டில் இருந்த கோபால்சாமி ஆகியோர் உயிரிழந்தனர்.
6 வயது குழந்தை தன்வீர்,வனஜா(68), மனோஜ்குமார்(49), கவிதா(38), கஸ்தூரி, ஆகியோர் மீட்கப்பட்டனர். இடிபாடுக்குள் மணிகண்டன் என்பவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணி நடந்து வருகிறது.சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேரில் வந்து பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.