“தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழிக் கொள்கையே தொடரும்!” மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி இந்த கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கிடையே புதிய கல்விக் கொள்கையை பற்றி விவரிக்க ,உயர்கல்வியில் புதிய கல்விக் கொள்கை 2020-ன் பங்கு’ என்ற தலைப்பில் இன்று மாநாடு நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும் நிலையில், காணொலி மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார். மேலும் ,தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்திலும் தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே கடைபிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தேசிய அளவில் 1:26 என ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் உள்ள நிலையில் தமிழகத்தில் 1:17 ஆக இருக்கின்றனர். நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் ஒரு சுமையாக இருக்கும் என்றும் ,தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்றும் தேசிய நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு எப்போதும் ஏற்காது என்று அவர் கூறினார்.
கல்விக்கொள்கையின் இலக்கை 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாதித்து காட்டியுள்ளதை குறிப்பிட்டார். 2035-க்குள் கல்வியறிவு பெற்றவர்களை 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், 2019-20 ஆம் ஆண்டிலேயே தமிழகம் அதனை எட்டி விடும்” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.