மோடியின் தேசபக்தி ஸ்கிரிப்ட் – திமுக கவிஞர் சாடல்

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததும், அதை தொடர்ந்து நாட்டுக்கு ஆபத்து என்கிற ரீதியில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இளம் சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பர்க் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக திமுக நிர்வாகியும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் கவிதை மூலம் எதிர் கருத்து பதிவிட்டுள்ளார். அவரது கவிதையின் சில வரிகள். 

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி 
உங்கள் தேசபக்தி நாடகத்தில் 
ஏதேனும் புதிய சம்பவங்களையோ 
வசனங்களையோ சேருங்கள் 
நீங்கள் ஒவ்வொரு முறையும் 
அதே நாடகத்தின் 
அதே வசனத்தை பேசத் தொடங்கும்போது 
குழந்தைகள் அடுத்த வசனத்தைச் சொல்லி 
சிரிக்கிறார்கள் 

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி 
நீங்கள் ஜெயிக்க விரும்பும்போதெல்லாம் 
தேச பக்தி 
ஒரு மந்திரக்கோல் போலாகிவிடுகிறது 
எல்லையில் நம் வீரர்கள் இறக்கிறார்கள்
உங்கள் விபரீத முடிவுகள் அம்பலமாகும்போது 
தேச விரோதிகள் 
நாட்டை ஊடுருவுகிறார்கள் 
பயங்கர வாதிகள் 
கருப்புப் பணத்தை 
பயன்படுத்தாதிருக்கவே 
எல்லாப் பணத்தையும் ஒழிக்கிறீர்கள் 
ஒரு மாற்றமும் இல்லாமல் 
இந்த நாடகம் அரங்கேறுகிறது 

‘இதைப்பற்றி நாம் பேசினால் என்ன?’ 
என ஏதோ ஒரு தேசத்துப் பாடகி கேட்கிறாள் 
உடனே இங்கிருந்து 
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரன் 
தேசத்தின் இறையான்மைக்கு 
ஆபத்து எனக் கதறுகிறான் 
அது ஒரு போலிக்கதறல் என 
எல்லோருக்கும் தெரியும் 

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி 
ஒரு அன்னியர் உங்களை விமர்சிப்பதால் 
உங்களுக்கு கோபம்வருவதை 
நான் நம்பவில்லை 
விமானங்கள் ஓடிக்கொண்டிருந்தவரை 
நீங்கள் அன்னியர்களுடன்தான் 
உரையாடிக்கொண்டிருந்தீர்கள் 
அவர்களுடன்தான் 
எப்போதும் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்கள் 
அவர்களிடம்தான் போர் விமானங்கள் வாங்கினீர்கள் 
அவர்களிடம்தான் குண்டூசிகள் 
இறக்குமதி செய்ய 
ஒப்பந்தங்கள் போட்டீர்கள் 
அன்னிய முதலீடுகளோடு ஒட்டிக்கொண்டு 
கொஞ்சம் அன்னியக் கருத்துக்களும் 
வந்துவிடுகின்றன 
சிந்திக்கும் மனிதர்கள் 
எல்லாவற்றிற்கும் கருத்துக்கள் 
கூறவே செய்கிறார்கள் 
சிந்தனையற்ற தேசபக்தி 
புண்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது 

இறையாண்மை என்பது 
அதிகாரத்தில் இருந்தல்ல 
நீதியிலிருந்தே பிறக்கிறது 
உங்களிடம் நீதியைத்தவிர 
எல்லாமே இருக்கிறது 

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி 
தேச பக்திக்கூவலால் 
உங்கள் எல்லாகுற்றங்களையும் 
மறைக்க இயலாது 
அந்த நாடகத்தை அதிகமாகவே 
நிகழ்த்திவிட்டீர்கள் 
ஒரு உண்மையான ஆபத்து 
தேசத்திற்கு வந்தால்கூட 
யாரும் நம்பமுடியாதபடி 
அதைக் கேலிக்கூத்தாக்கிவிட்டீர்கள் 

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி 
போரடிக்கிறது 
பயங்கரமாக தலை வலிக்கிறது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x