ஆஸ்திரேலிய சுற்றுலா பயணியிடம் பணம், பாஸ்போர்ட், மொபைல்போனை பறித்த ஆட்டோ டிரைவர்!!

ஓசூரில், ஆஸ்திரேலிய நாட்டு பெண் சுற்றுலா பயணியை, ஆட்டோவில் கடத்தி, அவரிடம், பணம், பாஸ்போர்ட், மொபைல்போனை, ஆட்டோ டிரைவர் பறித்துச் சென்றார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த, பெண் சுற்றுலாப்பயணி ரூத் அலெக்சாண்டர், 65; இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், சுற்றுலா விசாவில் இந்தியா வந்தவர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தங்கியிருந்தார். ஊரடங்கால் வெளியே செல்ல முடியவில்லை. இந்நிலையில், பஸ் போக்குவரத்து துவங்கியதால், புட்டப்பர்த்தி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்து, தமிழக எல்லையான ஓசூருக்கு, பஸ் மூலம் நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு வந்தார்.
அங்கிருந்து கர்நாடகா மாநில எல்லைக்கு ஆட்டோவில் சென்று, புட்டப்பர்த்தி செல்லலாம் என, அவர் முடிவு செய்து, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவில் ஏறினார். 100 ரூபாய் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவர், கர்நாடகா மாநில எல்லைக்கு செல்லாமல், ஓசூர் ரிங்ரோட்டில் உள்ள மத்தம் அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவரை தாக்கி, அவரிடமிருந்த, 3,000 ரூபாய், 9,000 ரூபாய் மதிப்பு மொபைல்போன், துணிகளுடன் இருந்த பாஸ்போர்ட் ஆகியவற்றை, ஆட்டோ டிரைவர் பறித்துச் சென்றார்.
படுகாயமடைந்த பெண் சுற்றுலாப்பயணி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஓசூர் டி.எஸ்.பி., முரளி விசாரணை நடத்தினார். பெண் சுற்றுலாப்பயணி ரூத் அலெக்சாண்டர் கொடுத்த புகாரின்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஓசூர் மூக்கண்டப்பள்ளி, எம்.எம்.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முள்ளுசங்கர், 50, என்பவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ரூத் அலெக்சாண்டரிடம் பறித்துச்சென்ற மொபைல்போன், பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்.