பார்சிலோனா அணியிலிருந்து விலகுகிறாரா லியோனல் மெஸ்ஸி?

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி தான் விளையாடும் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஜூன் மாதத்துடன் பார்சிலோனா உடனான ஒப்பந்தமானது முடிவடைந்துவிட்டது. ஆனால், ஒப்பந்த விதிகள்படி, 2021 ஆம் ஆண்டு சீசன் இறுதி வரை மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக விளையாட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் பெய்ரன் முனிச் அணியுடன் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி மெஸ்ஸியை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி அணியிலிருந்து விலக விரும்புவதாக கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக காலிறுதி போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட சில அணி நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். 2007க்கு பின்பு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இதே மெஸ்ஸியின் ஆட்டத்தால் பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.