மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!!

வங்கக்கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது. இது அடுத்த இரண்டு நாட்கள் வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடற்கரை பகுதியில் 45-55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.