கடத்தல் தங்கம் பறிமுதலில் சென்னை ஏர்போர்ட் முதலிடம்.!!!

இந்தியாவிலேயே கடத்தல் தங்கம் அதிகம் பிடிபடும் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2019-20ம் ஆண்டில், நாடு முழுவதும் விமான நிலையங்களில் கடத்தல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பான விபரங்களை மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இதன்படி, 2019-20ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.858 கோடி மதிப்புள்ள 2,629 கிலோ கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இதில், அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் மட்டும், வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.134 கோடி மதிப்புள்ள 375 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இவை நாடெங்கும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தில் பாதி ஆகும். வளைகுடா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்தே சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்திவரப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடத்தல் தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தி வருவதில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அங்குள்ள கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் விமான நிலையங்கள் வழியாக கொண்டுவரப்பட்ட மொத்தம் 444 கிலோ கடத்தல் தங்கம் கடந்த 2019-20ம் ஆண்டில் பிடிபட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 375 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது