சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.2 கோடி தருவதாக கூறியவரை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த தம்பதி!
![](https://thambattam.com/storage/2020/09/Kidney-780x470.jpg)
சிறுநீரகத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக கூறி தம்பதியினரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த நபரை ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் யனமலகுதுரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சத்யன்ரையனா மற்றும் பார்கவி. இவர்கள் சிலருடன் சேர்ந்து மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தனர். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர்கள் மெடிக்கல் கடையை மூடும் நிலைக்கு வந்தனர். மருந்துக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்ததால், சிறுநீரகத்தை விற்க முயன்றனர்.
இந்நிலையில் சிறுநீரகம் விற்க புதுதில்லியில் உள்ள சக்ரா மருத்துவமனை ஒன்றைக் கண்டுள்ளனர். இதில், சோப்ரா சிங் என்ற இடைத்தரகருடன் இணையத்தில் பேரத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 2 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரூ.17 லட்சம் சர்வீஸ் தொகையாக கட்ட வேண்டும் என அந்த நபர் கூறியிருக்கிறார். அதற்காக வங்கியில் கடன் வாங்கிய அந்த தம்பதியினர், 24 பரிமாற்றங்களில் ரூ.17 லட்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்துள்ளனர்.
![](https://thambattam.com/storage/2020/09/Notary-phone-scam-resized-300x169.jpg)
அந்த நபர் கண்டிப்பாக ரூ.2 கோடி கிடைக்கும் என்றும், அதன்பின்னர் உங்களின் ரூ.17 லட்சமும் கொடுக்கப்படும் என்று கூறியதை நம்பி அந்த தம்பதியினர் பணத்தை அனுப்பியிருந்தனர். அதன்பின்னர் மீண்டும் அந்த நபரை தொடர்புகொண்டு கிட்னி விற்பனை குறித்து கேட்டபோது, இன்னும் ரூ.5 லட்சம் மட்டும் தேவை அதையும் அனுப்பிவிட்டால் உடனே கிட்னியை பெற்றுக்கொண்டு ரூ.2 கோடியை தருவதாக தெரிவித்திருக்கிறார்.
அப்போது தான் அந்த தம்பதியினருக்கு தாங்கள் ஏமாற்றப்படுவது புரிந்திருக்கிறது. உடனே காவல்துறையினரை அணுகிய அந்த தம்பியினர் தாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகாரளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.