சொந்த தாய்மாமனை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த மருமகன்!
மதுரையில் தாய்மாமனை மருமகன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (67) என்பவர் அதே பகுதியில் சிமெண்ட் கடை நடத்திவந்தார். இந்நிலையில் கடைக்கு வந்த சிவலிங்கத்தின் தங்கை மகன் விஜி, அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க சென்ற மனைவி மற்றும் மகனுக்கும் கத்திக்குத்து விழுந்ததில் சிறுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விஜியின் தங்கைக்கும், செல்வகுமார் என்பவருக்கும் திருமணமாகி, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு இரண்டாவது திருமணத்தை சிவலிங்கம் செய்து வைத்ததாக தெரிகிறது.
தன் தங்கையுடன் விவாகரத்தான முன்னாள் கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில், சிவலிங்கத்தை அவரது தங்கை மகன் விஜி கத்தியால் குத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.