அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு!!

அதிக கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருஉருவ சிலைக்கு, செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 14 பள்ளிகளில் முழு கல்விகட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், பள்ளியை திறப்பது குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல பெற்றோர்கள் மாணவர்கள் மன நிலை மற்றும் கொரோனோவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பொருளாதார சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் இரண்டாம் பருவநிலை பாடத்திற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.