பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல்கள் வழங்கிய ராணுவ அதிகாரி மகேஷ்குமார் கைது!
பணத்துக்காக பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு சொல்லிவந்த ராணுவ அதிகாரி மகேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் ரேவாரி நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவத்தில் பொறியியல் பிரிவில் பணி புரிந்து வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்து வருவதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து லக்னோவை தலைமையிடமாக கொண்ட ராணுவ புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. மகேஷ்குமாரை பெண் ஒருவர் தொடர்பு கொண்டு வந்திருப்பதும், அந்த பெண்ணை மகேஷ்குமார் மேடம் ஜி என கோடு வேர்டில் (Code Word)இல் அழைப்பதும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அதன்பேரிலேயே அதாவது ஆபரேஷன் மேடம் ஜி என்ற பெயரில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. விசாரைணயில் அவர் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பெண் ஒருவர் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு சொல்லி வந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து லக்னோ ராணுவ புலனாய்வு தகவலின்படி ஜெய்ப்பூர் ராணுவ புலனாய்வு அமைப்பினர் மற்றும் ஹரியானா மாநிலத்தின் சிறப்பு போலீஸ் படையினரும் இணைந்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் மகேஷ்குமாரை தொடர்புகொண்ட பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும், பெண் மூலம் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்ததையும், கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஹார்லீன்கில் என்ற பெயரில் பேஸ்புக் மூலம் நட்பு கொண்டதையும் மகேஷ்குமார் ஒப்புக்கொண்டார். பேஸ்புக் மெசஞ்ரில் தொடர்பு கொள்ள துவங்கியதுடன் இரண்டு வாட்ஸ்அப் எண்களையும் பயன்படுத்தி வந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் பஞ்சாப்நேஷனல் வங்கி மூலம் பணம் பெற்று கொண்டதையும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மகேஷ்குமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டதை காட்டிலும் அதிகளவில் ரகசியம் கசிந்துள்ளது.இது தொடர்பாக அவரது மொபைல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது ரகசிய சட்டத்தை மீறியதாக தரூஹெரா போலீஸ்ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டடு, நீதிபதி முன்னர் மகேஷ்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். ” என்று தெரிவித்துள்ளார்.