கூட்டணி கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி கொடுக்கும் திமுக!

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசை தவிர்த்து, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பிற கட்சிகளை, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட வைக்க நெருக்கடி அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில், காங்கிரசின், ‘கை’ சின்னத்தை தவிர, மற்ற கட்சிகளின் சின்னம், மக்களிடம் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இதனால், தி.மு.க., கூட்டணி கட்சிகள், அவர்களின் சின்னத்தில் போட்டியிட்டால், அது, அ.தி.மு.க., வெற்றிக்கு வழி வகுக்கும் என, தி.மு.க., தலைமை கருதுகிறது.
எனவே, காங்கிரசை தவிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு, சட்டசபை தேர்தலில், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. மேலும், அக்கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும், தி.மு.க., தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. காங்கிரசுக்கு மட்டும், ‘கை’ சின்னத்தில் போட்டியிட வசதியாக, இரட்டை இலக்கத்தில், அதுவும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விரும்பவில்லை. இவ்விஷயத்தில், அக்கட்சிகளின் டில்லி தலைமை தான் முடிவெடுக்கும் என, கூறப்படுகிறது.
இது குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: “தமிழக தேர்தலில், இளைஞர்கள் ஓட்டுக்கள் தான் கணிசமாக பதிவாகும். எனவே, இளைஞர்களை கவரும் வகையில், ரஜினி கட்சியும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வும் அமைக்கும் வியூகத்தினால், தி.மு.க.,விற்கு பாதிப்பு ஏற்படும். தேர்தலுக்கு பின், ஒருவேளை தொங்கு சட்டசபை உருவானால், தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., இழுத்து விடும் வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்கவே, அக்கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க, தி.மு.க., விரும்புகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வருமா என்பது கேள்விக்குறியே!.” இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.