ரயில்வேயை காப்பாத்துங்க… டுவிட்டரில் டிரண்டிங்!!

ரயில்வே துறையில் தனியாரின் பங்களிப்பு கொண்டு வர உள்ளது மத்திய அரசு. இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுகின்றன. இதனால் சமூகவலைதளங்களில் இன்று (செப்., 19) #SaveRailwaySaveNation என்ற ஹேஷ்டாக் டிரண்ட்டாகி வருகிறது.
நஷ்டத்தில் இருந்து மீளவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் நாட்டின் மிகப்பெரிய துறையான ரயில்வேயும் அடக்கம். ஏற்கனவே நாட்டில் கொரோனா பிரச்னையால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த சூழலில் மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனியார் மயமாக்கும் முடிவால் ஏற்கனவே பணியில் இருக்கும் பலர் பாதிக்கப்படுவர், புதிய வேலை வாய்ப்பில் பிரச்னை வரும். மேலும் பயணிகளுக்கும் ரயில் பயணம் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இதன் வெளிப்பாடாக #SaveRailwaySaveNation, #SaveRailwaySaveNationIndian என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி உள்ளது. இந்திய அளவில் இது இரண்டாம் இடத்தில் டிரண்ட் ஆகிறது. #SaveRailwaySaveNation என்ற ஹேஷ்டாக்கை மட்டும் 1.5 லட்சம் பேர் ரீ-டுவீட் செய்துள்ளனர்.
இதுப்பற்றி மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுவாக பொதுத்துறை நிறுவனங்களில் சரியாக வேலை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. சங்கம் வைத்து கொண்டு எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்வர். ஆனால் தனியார் பங்களிப்பு வரும்போது அப்படி செய்ய முடியாது. தனியார் துறை பங்களிப்பால் ரயில்வே துறை மேலும் சிறப்படையும். பயணிகளுக்கோ, ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கோ எந்த பாதிப்பும் வராது. சிறந்த நிர்வாகம், கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகள் ரயில்வே துறையில் மேம்படும்” என்றார்.