‘இந்தியாவில் 500% அதிகரித்த சைபர் கிரைம்; காரணம் இதுதான்!’ – எச்சரிக்கும் அஜித் தோவல்

நாட்டில் நடக்கும் சைபர் கிரைம்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இணையவழி சைபர் மாநாட்டில் பேசிய அவர், போதிய விழிப்புணர்வு இல்லாததும், மோசமான சைபர் சுகாதாரமும்தான், அதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
சமீபகாலமாக இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பணபரிவர்த்தனையில் தொடங்கி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என அனைத்து தரப்பு மக்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சைபர் கிரைம் நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
மக்களுக்கான சைபர் பாதுகாப்பை அரசு நிச்சயம் வழங்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்தாலும், தேசிய தகவல் மையத்தில் உள்ள பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் தகவல்களை குறிவைத்து நடத்தப்பட்ட `சைபர் அட்டாக்’ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற “cocon 2020” எனப்படும் இரண்டு நாள் இணைய வழி சைபர் மாநாட்டில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாட்டில் சைபர் குற்றங்கள் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என்றார். மேலும், “நாட்டின் சைபர் ஸ்பேஸைப் பாதுகாக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருகிறது.தேசிய சைபர் பாதுகாப்பு வியூகம் 2020′ மூலம் இணைய பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அரசு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சைபர் குற்றங்களை நிர்வகிக்க முடிந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மோசமான சைபர் சுகாதாரம் காரணமாக சைபர் கிரைம்களில் 500 சதவீதம் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளோம்.
இம்மாதிரியான சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். தனிப்பட்ட கேட்ஜெட்களைப் (Gadgets) பாதுகாக்க வேண்டும். சைபர் கிரைம் பற்றிய புகார்களை அளிக்க மக்கள் முன்வர வேண்டும்’’ என்று ” அஜித் தோவல் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, சீனாவில் இருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள், துணை குடியரசுத் தலைவர், நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரை உளவு பார்ப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு 30 நாள்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக சீன வெளியுறவுத் துறைக்கு எடுத்துச் சென்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து, அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல என்றும், தனியார் நிறுவனம் என்றும் கூறி இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.