கொரோனா மையத்தில் தீ விபத்து: ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்ட நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விஜயவாடாவில் 70 கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில், இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், மேல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு குதிக்க சிலர் முயன்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.