“திமுகவிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது” இது எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் அறிக்கை!!

சமீப காலமாக திமுக தலைமையை குறை கூறி கட்சி தாவல் செய்வது அதிகரித்து வருகிறது. முதலில் விபி துரைசாமி திமுகவுக்கு எதிராக கொடி பிடித்தார். பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜக துணை தலைவர் பதவியை பெற்றார்.

அடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவை எதிர்த்து குரல் கொடுத்து, பாஜகவில் இணைய உள்ளார். அவரை கட்சியில் இருந்து திமுக சஸ்பென்ட் செய்துள்ளது. தொடரும் இதுபோன்ற அதிருப்தி குரல்களால் திமுக தலைமை அதிர்ந்து போயிருக்கிறது.

ஸ்டாலின் தலைமைக்கான தோல்வியே இது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுகவில் இருந்து மேலும் முக்கிய எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக அரசியல் களத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

அதில் முக்கியமான எம்எல்ஏவின் பெயராக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளார் என்று தகவல்கள் பரவின. இது திமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

“கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக  வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத்  தலைவர் நன்கறிவார்.

ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இது போன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x