கொரோனா மைசூர்பாக் விற்பனை கடைக்கு ‘சீல்’

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் என்று கூறி, மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்த கடைக்கு, கோவை உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

கொரோனாவால் தொழில் நொடிந்து விட்டதே என்று வருத்தப்படுவோர் பலர் இருந்தாலும், அதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைப்போரும் ஊரில் இருக்கத்தான் செய்கின்றனர். கோவை, தொட்டிபாளையம் பகுதியில் செயல்படும் இனிப்பு கடை உரிமையாளர் ஸ்ரீராம், என்பவர், கொரோனாவை ஒரே நாளில் விரட்டும் மூலிகை மைசூர்பாக் என்று கூறி, மைசூர்பாக் தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

கிலோ 800 ரூபாய்க்கு மைசூர்பாக் விற்ற போதிலும், கொரோனா குணமாகி விடும் என்று நம்பி பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பித்தனர். உலகமே, கொரோனாவுக்கு இதுவரை மருந்தில்லை என்று கூறி வரும் நிலையில், ஒரே நாளில் கொரோனாவை மைசூர்பாக் விரட்டி விடும் என்று அவர் கூற ஆரம்பித்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காலை, அவரது கடையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

பேக்கரி மற்றும் ஸ்வீட் கடையான அங்கு, விற்பனைக்கு இருந்த 120 கிலோ மைசூர்பாக் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1 லட்சம் ரூபாய். கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், விற்பனை உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

டாக்டர் தமிழ்செல்வன் கூறுகையில், ”மூலிகை மைசூர்பாக் தயார் செய்ய எந்த அனுமதியும் பெறவில்லை. பொய்யான விளம்பரம் செய்து, மைசூர்பாக் விற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்பாக், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x