காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்விலிருந்து விலக்கு?

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலிருந்து, காய்ச்சல் உள்ள மாணவர்களுக்குத் விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வும், 16 ஆம் தேதி 11ஆம் வகுப்பின் விடுபட்ட பாடத்துக்கான தேர்வும், அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பைச் சேர்ந்த கடைசித் தேர்வை எழுத முடியாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
அதே சமயத்தில் பொதுத் தேர்வைச் சந்திக்கவுள்ள மாணவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையிலிருந்து சொந்த ஊரான கொடைக்கானலுக்கு திரும்பிய 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழலில் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, காய்ச்சல் உள்ள மாணவர்களுக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “காய்ச்சல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்துப் பரிசீலித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஹால் டிக்கெட்டுடன் மாணவர்களுக்கு 2 முகக்கவசங்கள் வழங்கப்படும். தேர்வு அறை காலை மாலை இரு நேரமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.