சாலையில் வாகனம் மோதி கீழே சரிந்த குதிரை குட்டிக்கு அரணாய் நின்று காத்த தாய் குதிரை!

வாகனம் மோதி காயமடைந்து, கீழே விழுந்த தன் குட்டிக்கு, பாதுகாப்பாக சாலையில் நின்ற குதிரையின் தாய்மை உணர்வு, பார்ப்போரை நெகிழ செய்துள்ளது.
செங்குன்றம், புள்ளிலைன் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவரால் வளர்க்கப்படும் குதிரைகள், அவ்வப்போது, ஜி.என்.டி., சாலையில் சுற்றித்திரிவது வழக்கம். நேற்று காலை, 8:00 மணி அளவில், செங்குன்றம் காவல் நிலையம் எதிரில், தாய் குதிரையுடன் வலம் வந்த குட்டி குதிரை மீது, இருசக்கர வாகனம் மோதியது. அதனால், காலில் காயம் அடைந்த குதிரை குட்டி, நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதன் பிறகு, அதனால் எழுந்து நிற்க முடியவில்லை.
போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால், மற்ற வாகனங்களும் வேகமாக சென்று கொண்டிருந்தன. குட்டியின் நிலையை கண்ட தாய் குதிரை, அதன் மீது, மற்ற வாகனங்கள் மோதாமல் தடுக்கும் வகையில், குட்டியின் அருகே சில நிமிடம் பாதுகாப்பாக நின்றது. அதைக்கண்ட சிலர், போலீசார் உதவியுடன், குதிரை குட்டியை, சாலையோரம் துாக்கி படுக்க வைத்து, அதற்கு தண்ணீரும், பிஸ்கட்டும் கொடுத்தனர். மேலும், கால்நடை மருத்துவர் மூலம், குதிரை குட்டிக்கு உதவினர். குட்டியை காக்க, சாலையில் தடுப்பாக நின்ற, குதிரையின் தாய்மை உணர்வு, பார்த்தவர்களை நெகிழ செய்தது.