லூடோ விளையாட்டில் தன் மகளை தொடந்து தோற்கடித்த தந்தை.. நீதி கேட்டு நீதிமன்ற படியேறிய மகள்!!

லூடோ விளையாட்டில் தன் அப்பா தன்னை எப்போதும் தோற்படிப்பதாக போபாலை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால், ஆன்லைனில் விளையாட்டுக்கள் விளையாடுவது போன்ற பல விஷயங்களை செய்தனர். அந்தவகையில் போபாலை சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் லூடோ என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தபோது பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.
24 வயது கல்லூரி மாணவி, தினமும் அவரது குடும்பத்தினருடன் லூடோ விளையாடிக்கொண்டிருந்துள்ளார். ஆனால், அந்த விளையாட்டில் அந்த பெண்ணின் தந்தை தொடர்ந்து அவரை தோற்கடித்துள்ளார். இதனால் மிகவும் மனமுடைந்த அந்த பெண், தற்போது குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்திற்கு சென்று “என் அப்பா சரியாக விளையாடமாட்டார். ஆனால், என்னை எப்போதும் தோற்கடிக்கிறார். அவர் என்னை ஏமாற்றி விளையாடுகிறார். என் அப்பா இவ்வாறு செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
அதனை அடுத்து, அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிய நீதிபதி, மருத்துவ ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அந்த நீதிபதி பேசுகையில், “இந்த காலத்து மாணவர்களுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதுவரை 3 முறை அந்த பெண்ணுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால், அந்த பெண் சரியாகவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.