கொரோனா அச்சுறுத்தலால் சட்ட மன்றமாக மாறும் கலைவாணர் அரங்கம்!

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு, ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். எனவே கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவதே இல்லை.
இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மார்ச் 9ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதாலும், சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பு செய்ததை தொடர்ந்தும் அவசர அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் முடிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் முடிந்த 6 மாதத்திற்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதனால் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 24ம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மையம் மிகவும் சிறியதாகும். 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அங்கு இருக்க முடியாது. இதனால் தற்போதுள்ள தலைமை செயலக வளாகத்தை விட்டு வெளியில்தான் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடங்களில் சட்டப்பேரவை கூட்டத்தொடரரை நடத்தலாமா? என்பது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தி வந்தனர்.
அதன்படி, சட்டப்பேரவை குளிர்கால கூட்டம் சென்னை, கலைவாணர் அரங்கில் நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு இன்று காலை 11.30 மணிக்கு தமிழக சபாநாயகர் தனபால் நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மண்டபத்தில் 234 எம்எல்ஏக்களும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கூட்டத்தை நடத்த முடியுமா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டதுடன் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார். அங்கு போதுமான இடவசதி உள்ளதால் கலைவாணர் அரங்கத்திலேயே வருகிற சட்டமன்ற கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.