நெடுஞ்சாலையில் கவிழ்ந்த எண்ணெய் லாரி..! 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!
சென்னையில் இருந்து சேலம் வழியாக ரூப் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து சேலம் வழியாக ஈரோடு மாவட்டம் பவானிக்கு டேங்கர் லாரி மூலம் ரூப் ஆயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த டேங்கர் லாரியை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி சேலம் உடையாப்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் லாரி டேங்கரில் இருந்த சுமார் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதனிடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியோடு லாரி தூக்கி நிறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் பாலாஜி மற்றும் கிளீனர் நவீன்குமார் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.